Tuesday 2 January 2018

15. மூன்று பெரும் ஜனநாயகம் – மா செ துங்

இராணுவத்தில் ஒரு தகுதியான அளவு ஜனநாயகம் நடைமுறைப்படுத்த வேண்டும். பிரதானமாக. மிரட்டி அடிக்கும் பிரபுத்துவ நடைமுறையை ஒழித்து, அதிகாரிகளையும் படையினரையும் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும். இது செய்யப்பட்டதும் அதிகாரிகளுக்கும் படையினருக்கும் இடையில் ஐக்கியம் உருவாகும், படையினர் போர்திறன் பெரிதும் விரிவடையும் நீண்டகால கொடூர யுத்தத்தல் தாக்கு பிடிக்கும் நமது ஆற்றல் பற்றி சந்தேகம் இராது.
(நீண்ட கால யுத்தம் பற்றி – மே 1938)

மகத்தான போராட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைமை உறுப்புகள் எல்லாவற்றையும், அதன் உறுப்பினர், ஊழியர் அனைவரையும் தமது முன்முயற்சியை (முனைப்பை) (initiative) முற்றாக வெளிப்படுத்த வேண்டும் என்று கோருகின்றது. இந்த முன்முயற்சி மட்டுமே வெற்றியை உத்தரவாதம் செய்ய முடியும். இந்த முன்முயற்சி தலைமை உறுப்புகளும் ஊழியர்களும் கட்சி அணியினரும் ஆக்கபூர்வமாக வேலை செய்யும் ஆற்றலிலும், பொறுப்புணர்ச்சியிலும், வேலையில் காட்டும் நிரம்பிய சுறுசுறுப்பிலும், கேள்விகள் எழுப்பி அபிப்பிராயங்கள் தெரிவித்துத் தவறுகள் விமர்சனம் செய்யும் துணிவிலும் திறமையிலும், தலைமை உறுப்புகளையும் தலைமை ஊழியர்களையும் தோழமை பூர்வமாகக் கண்காணிப்பதிலும், பருண்மையாகக் காட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால் “முன்முயற்சி” என்பது வெறும் வாய்ப்பந்தலாகும். ஆனால் இத்தகைய முன்முயற்சியின் பிரயோகம் கட்சி வாழ்வில் பரவியுள்ள ஜனநாயகத்தைச் சார்ந்திருக்கிறது. கட்சி வாழ்வில் போதிய ஜனநாயகம் இல்லாவிட்டால் இதை முற்றாக வெளிப்படுத்த முடியாது.

ஜனநாயக சூழ்நிலையில் தான் பெருந்தொகையான திறமைசாலிகளை வளர்த்தெடுக்க முடியும்.
(தேசிய யுத்தத்தல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்- அக்டோபர் 1938)

யாராகயிருந்தாலும் சரி, ஒருவர் பகைவர் அல்லாதவரையில் தீய நோக்கத்துடன் தாக்குதல் தொடுக்காத வரையில், அவர் பேச அனுமதிக்கப்பட வேண்டும். அவர் ஏதும் தவறானவற்றைச் சொன்னால் பரவாயில்லை எல்லா மட்டங்களிலுள்ள தலைவர்களும் ஏனையோர் பேசுவதைக் கேட்கும் கடப்பாடு உடையவர்கள். இங்கு இரண்டு கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும.

1) அறிந்தவை எல்லாவற்றையும் பேசுவது, ஒன்றையும் ஒழிக்காமல் பேசுவது.

2) பேச்சாளரைக் குறை கூறாமல் இருப்பது. ஆனால் அவருடைய வார்த்தைகளை எச்சரிக்கையாகக் கொள்வது “பேச்சாளரை குறை கூறாமல் இருப்பது” என்ற கோட்பாட்டை போலியாக அல்ல, உண்மையாகக் கடைப் பிடிக்காவிட்டால் விளைவு “அறிந்தவை எல்லாவற்றையும் பேசுவது, ஒன்றையும் ஒழிக்காமல் பேசுவ”தாக இருக்காது.
(1945 ஆம் ஆண்டுக்கான கடமைகள் – 15 டிசம்பர் 1944)

ஜனநாயக வாழ்வு, ஜனநாயகத்துக்கும் மத்தியத்துவத்துககும் உள்ள உறவு, ஜனநாயக மத்தியத்துவத்தை நடைமுறையில் பிரயோகிக்கும் வழி ஆகியவை பற்றி கட்சி உறுப்பினர்கள் புரிந்து கொள்வதற்காக, ஜனநாயக வாழ்வு பற்றிய கற்பித்தல் கட்சிக்குள் நடத்தப்பட வேண்டும். இந்த வழியில்தான் கட்சிக்குள் ஜனநாயக வாழ்வை உண்மையில் விரிவாக்க முடியும். அதே வேளையில் அதீத-ஜனநாயகத்தையும், கட்டுபாட்டை அழிக்கும் தன்மனப் போக்கையும் தவிர்க்க முடியும்.
(தேசிய யுத்தத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்தரம் – அக்டோபர் 1938)

கோட்பாட்டுத துறையில் அதீத-ஜனநாயகத்தின் ( ultra-democracy) வேர்களை அழித்தொழியுங்கள். முதலாவதாக, அதீத-ஜனநாயகம் கட்சி அமைப்பிற்குத் தீங்கு விளைவிக்கின்றது அல்லது அதை முழுவதுமாக உடைத்தும் விடுகின்றது, கட்சியின் போராற்றலை சிறுமைப்படுத்தி அல்லது முற்றாக சிதைத்துக்கூட விடுகின்றது. கட்சியின் போராட்டக் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் செய்கின்றது. இவ்வாறு புரட்சியைத் தோல்வியடையச் செய்கின்றது. இவை அதீத-ஜனநாகத்தால் ஏற்படும் அபாயம் என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டும்.

இரண்டாவதாக, கட்டுப்பாட்டை விரும்பாத குட்டி முதலாளிய தனிநபர் வாதத்திலிருந்து அதீத-ஜனநாயகம் தோன்றுகின்றது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டை விரும்பாத இயல்பு கட்சிக்குள் கொடுவரப்பட்டதும், அது அரசியல் ரீதியிலும், அமைப்பு ரீதியிலும் அதீத-ஜனநாயகக் கருத்துகளாக வளர்கின்றது. இந்தக் கருத்துகள் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டக் கடமைகளுக்குச் சிறிதளவேனும் பொருந்தியவையல்ல.

(கட்சியில் நிலவும் தவறான கருத்துக்களைத் திருத்துவது பற்றி – டிசம்பர் 1929)

No comments:

Post a Comment