Friday 5 January 2018

22. சிந்தனா முறையும் வேலை முறையும்

(சமூக வளர்ச்சியின் புறநிலை விதிகளை கம்யூனிஸ்டுகள் அறிந்து கொள்வதின் அவசியத்தை மா சே துங் வலியுறுத்துகிறார்)

“சுதந்திரத்துக்கான மனிதனின் போராட்டத்தில், இயற்கை விஞ்ஞானம் என்பது ஓர் ஆயுதமாக விளங்குகிறது. சமூகத்தில் சுதந்திரத்தைப் பெறுவதற்கான, சமூகத்தை புரிந்து கொள்ளவும் மாற்றவும் சமூகப் புரடசியை நடத்தவும் மனிதன் சமூக விஞ்ஞானத்தைப் பயன்படுத்த வேண்டும். இயற்கை உலகில் சுதந்திரம் பெற வேண்டுமானால் இயற்கையை புரிந்து கொள்ளவும் கட்டுப்படுத்தவும் மாற்றவும், இவ்வாறு இயற்கையில் இருந்து விடுதலை பெறவும் இயற்கை விஞ்ஞானத்தை பயன்படுத்த வேண்டும்.”
(எல்லை பிராந்திய இயற்கை விஞ்ஞான ஆராய்ச்சி
சங்கத்தின் ஆரம்ப கூட்ட உரை  5 பிப்ரவரி 1940)

“இயக்கவியல் பொருள்முதல்வாதம் பற்றிய மார்க்சிய தத்துவத்துக்கு இரண்டு சிறப்பியல்புகள் உண்டு. ஒன்று அதன் வர்க்க இயல்பு. இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது பாட்டாளி வர்க்கத்துககுச் சேவை செய்வது என்று அது வெளிப்படையாக பிரகடனம் செய்கின்றது. மற்றது அதன் நடைமுறை சாத்தியப்பாடு. தத்துவம் நடைமுறையில் தங்கியிருப்பதை அது வலியுறுத்துகின்றது, தத்துவம் நடைமுறையை அடிப்படையாகக் கொண்டது. மீண்டும் நடைமுறைக்கே சேவை செய்கின்றது என்று வலியுறுத்துகின்றது.”
(நடைமுறை பற்றி – ஜீலை 1937)

“புறநிலை உலகின் விதிகளைப் புரிந்து, அவற்றை விளக்குவதில் திறமை பெற்றிருப்பது மிக முக்கியமான பிரச்சினையல்ல, பதிலுக்கு, ஊக்கமாக உலகை மாற்றுவதற்கு அவ்விதிகள் பற்றிய அறிவைப் பிரயோகிப்பது தான் மிக முக்கியமான பிரச்சினை என்று மார்க்சியத் தத்துவம் கருதுகின்றது.”
(நடைமுறை பற்றி – ஜீலை 1937)

“மனிதன் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? அவை வானத்திலிருந்து விழுகின்றனவா? இல்லை. மூளையில் இயல்பாக உள்ளனவா? இல்லை. அவை சமூக நடைமுறையிலிருந்து மட்டும் தோன்றுகின்றன. உற்பத்தக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம், அறிவியல் ஆய்வு என்ற மூவகை நடைமுறையிலிருந்து வருகின்றன.”
(மனிதனின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? – மே 1963)

“பருப்பொருளில் இருந்து உணர்வுக்கும், பின்னர் உணர்வில் இருந்து பருப்பொருளுக்கும். அதாவது நடைமுறையில் இருந்து அறிவுக்கும், பின்னர் அறிவில் இருந்து நடைமுறைக்கும் செல்லும் போக்கு திரும்பத் திரும்பப் பல தடவை நிகழ்ந்த பின்னர் மாத்திரம் ஒரு சரியான அறிவுக்கு வரக்கூடிய நிலை அடிக்கடி ஏற்படுகின்றது. இத்தகையது தான் அறிவு பற்றிய மார்க்சிய தத்துவம். அறிவு பற்றிய இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவம்.”
(மனிதனின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? – மே 1963)

“யார் ஒரு விசயத்தை அறிய விரும்பினாலும் அவருக்கு அத்துடன் தொடர்பு கொள்வதைத் தவிர, அதாவது, அதன் சூழ்நிலையில் வாழ்வதைத் (நடைமுறையில் ஈடுபடுவதை) தவிர வேறுவழியில்லை… நீங்கள் அறிவு பெற விரும்பினால் யதார்த்தத்தை மாற்றும் நடைமுறையில் பங்கு பெற வேண்டும. பேரிக்காவின் சுவையைப் பார்க்க வேண்டும்… புரட்சியின் தத்துவமும் வழிமுறைகளும் பற்றி நீங்கள் அறிய விரும்பினால், நீங்கள் புரட்சியில் பங்காற்ற வேண்டும். உண்மையான அறிவு முழுவதும் நேரடி அனுபவத்தில் இருந்தே பிறக்கின்றது.”
(நடைமுறை பற்றி – ஜீலை 1937)

“நாம் எந்த விசயத்தைச் செய்தாலும், அதன் உண்மையான சூழ்நிலைகள், அதன் இயல்பு, இதர விசயங்களுடன் அதன் உறவுகள் ஆகியவற்றைப் புரிந்து கொண்டால் ஒழிய அதை ஆளும் விதிகளை அறிய மாட்டோம், அல்லது அதை எப்படிச் செய்வதென அறிய மாட்டோம், அல்லது அதை நன்றாகச் செய்ய மாட்டோம் என்பது யாரும் அறிந்ததே.”
(சீனப் புரட்சி யுத்தத்தில் யுத்த தந்திர பிரச்சினைக் – டிசம்பர் 1936)

“ஒருவர் தனது வேலையில் வெற்றியடைய விரும்பினால், அதாவது எதிர்பார்த்த விளைவுகளைப் பெற விரும்பினால், தனது கருத்துகளைப் புறநிலை உலகத்தின் விதிகளுடன் இசைவுடையவை ஆகச் செய்யவேண்டும். அவை இசைவாகாவிட்டால், அவர் தனது நடைமுறையில் தோல்வியடைவார். தோல்வியடைந்த பின், அவர் தோல்வியில் இருந்து தனது படிப்பினைகளைப் பெற்று, புறநிலை உலகத்தின் விதிகளுக்கு இசைவாகத் தனது கருத்துகளைத் திருத்தித் தோல்வியை வெற்றியாக மாற்ற முடியும். “தோல்வி என்பது வெற்றியின் தாய்”, “இடறி விழுதல், அறிவில் எழுதல்” என்பதன் பொருள் இதுவே ஆகும்.”
(நடைமுறை பற்றி – ஜீலை 1937)

“நாம் மார்க்சியவாதிகள், நாம் ஒரு பிரச்சினையை அணுகும் போது யதார்த்த உண்மைகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமே அன்றி, வெறும் வரைவிலக்கணங்களில் இருந்து அல்ல என்றும் இந்த உண்மைகளை ஆராய்வதன் மூலம் நமது வழிகாட்டும் கோட்பாடுகள், கொள்கைகள், வழிமுறைகள் ஆகியவற்றை வகுக்க வேண்டும் என்றும் மார்க்சியம் கற்பிக்கின்றது.”
(ஏனான் கலை இலக்கியக் கருத்தரங்கு உரை – மே 1945)

“கம்யூனிஸ்டுகள் எல்லாரும் மனதில் உறுதியாகப் பதித்துக் கொள்ள வேண்டிய, மிக அடிப்படையான வேலை முறை யாதெனில் யதார்த்த நிலைமைகள்கு ஏற்ப வேலைக் கொள்கைகளை நிர்ணயிப்பதாகும். நாம் இழைத்த தவறுகளின் காரணத்தை ஆராய்ந்தால், ஒரு குறிப்பிட்ட காலம், இடம் இவற்றின் யதார்த்த நிலைமையில் இருந்து விலகி நமது வேலைக் கொள்கைகளை அக ரீதியாக நிர்ணயித்த காரணத்தால் தான் அவை தோன்றின என்பதைக் காண்போம்.”
(ஷன்சி-சுய்யுவன் விடுதலைப் பிரதேச ஊழியர்கள்
 மாநாட்டு உரை - 1 ஏப்ரல் 1948)

“ஒரு விசயத்தை நோக்கும் போது, நாம் அதன் சாராம்சத்தை ஆராய வேண்டும். அதன் தோற்றப்பாட்டை வாயிலுக்கு இட்டுச் செல்லும் படியாக மட்டும் கருத வேண்டும். ஒருக்கால் அந்த வாயிலைக் கடந்துவிட்டால், நாம் அவ்விசயத்தின் சாராம்சத்தை கிரகித்துக் கொள்ள வேண்டும். நம்பகமான அறிவியல் ரீதியான ஆராய்ச்சி முறை இது ஒன்று தான்.”
(சிறுபொறி பெருங் காட்டுத் தீயை மூட்டலாம் – 5 ஜனவரி 1930)

“அகநிலையாகவும் ஒருதலைப்பட்சமாகவும், மேலோட்டமாகவும் பிரச்சினைகளை அணுகுபவர்கள் தான் களத்திற்கு வந்த அதே கணத்தில், சூழ்நிலைகளை ஆராயமலும், விசங்களை முழுமையாக (அவற்றின் வரலாற்றையும் அவற்றின் இன்றைய நிலைமைகளையும்) நோக்காமலும் விசயங்களின் சாராம்சத்தை (அவற்றின் இயல்பையும் ஒரு விசயத்துக்கும் இன்னொன்றுக்கும் இடயிலுள்ள அக உறவுகளையும்) ஊடுருவிப் பாராமலும், தாம் சரியென்று கருதி கட்டளைகள் அல்லது உத்தரவுகள் இடுவர். இத்தகைய நபர்கள் தடுககி விழுவது திண்ணம்.”
(நடைமுறை பற்றி – ஜீலை 1937)

“ஒரு யுத்தத்தை நடத்துபவர்கள் புறச் சூழ்நிலைகள் இடும் எல்லைக் கோடுகளைத் தாண்டி சென்று யுத்தத்தால் வெற்றி பெற முடியாது. இருந்தும், இந்த எல்லைக்குள் நின்று வெற்றிக் கொடி நாட்ட திறமையான பாத்திரத்தை ஆற்ற முடியும், ஆற்றவும் வேண்டும். ஒரு யுத்தத்தில் தளபதிகளுக்கான செயல் அரங்கு புறச் சூழ்நிலைச் சாத்தியப்பாடுகளில் கட்டியமைக்கப்பட வேண்டும. ஆனால் அந்த அரங்கில் ஒலியும், வண்ண ஜாலமும், ஆற்றலும், கம்பீரமும், நிறைந்த பல நாடக நிகழ்ச்சிகளை அவர்களால் அரங்கேற்ற முடியும். ”
(நீண்ட கால யுத்தம் பற்றி – மே 1938)

“மாறிய நிலைமைகளுக்கு ஏற்ப மக்களும் தமது சிந்தனையை மாற்ற வேண்டும். ஆனால் ஒருவரும் கற்பனைச் சிறகு கட்டி பறக்கவோ அல்லது புற நிலைமைகளால் உத்தரவாதம் செய்யப்படாத செயல் திட்டங்களை வகுக்கவோ அசாத்தியமானவற்றை செய்யும் படி கட்டாயப்படுத்தவோ கூடாது. இருந்தும் இன்றைய பிரச்சினை யாதெனில், வலதுசாரி பழமைவாத சிந்தனை பல துறைகளில் இன்னும் தொல்லைகளை விளைவித்து புற நிலைமையின் வளர்ச்சியுடன் அடியொற்றி முன்னேறாமல் இந்த துறைகளின் வேலைகளை தடை செய்கின்றது. தம்மால் நிறைவேற்றக் கூடிய விசங்கள் நிறைவேற்ற முடியாது என்று பலர் கருதுவது தான் இன்றைய பிரச்சினையாகும்.”
(சீனாவின் நாட்டு புறத்தில் சோஷலிச எழுச்சி பெருக்கு
என்ற நூலின் முன்னுரை ? 27 டிசம்பர் 1955)

“எந்த ஒரு வளர்ச்சிப் போக்கிலும் ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் இருக்குமேயனால், அவற்றில் ஒன்று தலைமைப் பாத்திரத்தை, தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கும். பிரதான முரண்பாடாக இருக்கும். ஏனையவை இரண்டாந்தரமான, கீழ்ப்பட்ட நிலையில் இருக்கும். எனவே, இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட முரண்பாடுகள் உடைய எந்த ஒரு சிக்கலான வளர்ச்சிப் போக்கையும் ஆராயும் போது, அதன் பிரதான முரண்பாட்டைக் காண்பதற்கு நாம சகல வழிகளிலும் முயலவேண்டும். ஒருகால் இந்த பிரதான முரண்பாட்டை கிரகித்துக் கொண்டதும், எல்லா பிரச்சினைகளும் எளிதில் தீர்ந்து விடுகின்றன.”
(முரண்பாடு பற்றி – ஆகஸ்ட் 1937)

“தலைமைப் பதவியில் உள்ள எவரும் கீழ்மட்டத்தில் குறிப்பிட்ட பிரிவுகளிலுள்ள குறிப்பிட்ட தனி நபர்களிடம் இருந்து அல்லது நிகழ்ச்சிகளில் இருந்து உருப்படியான அனுபவத்தை சேகரிக்காவிட்டால், அவர் எல்லா பிரிவுகளுக்கும் பொது வழிகாட்டல் கொடுக்கத் தகுதியற்றவராவர் எல்லா மட்டங்களிலும் உள்ள தலைமை ஊழியர்களும் இந்த முறையைப் படித்துப பிரயோகிப்பதற்காக, இதை எல்லா இடங்களிலும் பரப்ப வேண்டும்.”
(தலைமை முறை பற்றிய சில பிரச்சினைகள் – 1 ஜீன் 1943)


No comments:

Post a Comment