Saturday 6 January 2018

24. தவறான கருத்துகளைத் திருத்துவது – மா சே துங்

நமது வேலையில் அசுர சாதனைகளை ஈட்டினாலும் கூட, இறுமாப்பும் செருக்கும் அடைவதற்கு எவ்விதக் காரணமும் இல்லை. அடக்கம் ஒருவரின் முன்னேற்றத்திற்கு துணை செய்யும். இறுமாப்பு பின்னடைவுக்கு வழிகோலுகின்றது. இது நாம் எப்பொழுதும் மனதில் வைத்திருக்க வேண்டிய ஓர் உண்மையாகும்.
(சீனக் கம்யூனிஸ்ட்கட்சியின் 8வது தேசிய மாநாட்டின்
ஆரம்ப உரை – 15 செப்டம்பர் 1956)

பல விசயங்கள் மீது நாம் குருட்டுத் தனமாக, விமர்சனமின்றி நம்பிக்கை வைத்தால் அவை நமக்கு ஒரு வேண்டாத சுமையாக, தடைகளாக மாறலாம். எடுத்துக் காட்டுகள் சிலவற்றைப் பார்ப்போம். பிழைகள் இழைத்ததும், தாம் தவறு செய்து விட்டதாக எண்ணி, ஆர்வம் குன்றி விடலாம், பிழைகள் செய்யாவிட்டால், தாம் தவறு அற்றவர்கள் என்று எண்ணி, இறுமாப்பு அடையலாம். வேலையில் சாதனைகள் ஈட்டாவிட்டால், தோல்வி மனப்பான்மையும், மனச் சோர்வும் ஏற்படலாம், அதே வேளையில் சாதனைகள் கர்வத்தையும், செருக்ககையும் ஏற்படுத்தலாம். குறுகிய காலப் போராட்ட வரலாறு உடையவர்கள் தமது குறுகிய காலப் போராட்ட வரலாறு காரணமாக பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கலாம், அதே வேளையில் நீண்ட வரலாறு உடைய ஒருவர் தமது நீண்ட காலப் போராட்ட வரலாறு காரணமாக தற்பெருமை கொள்ளலாம்.

தொழிலாளர் – விவசாயித் தோழர்கள் தமது சிறந்த வர்க்கத் தோற்றம் காரணமாக அறிவுத்துறையினரை இகழ்ந்து நோக்கலாம், அதே சமயத்தில் தம்மிடமுள்ள குறிப்பிட்ட அளவு அறிவைக் கொண்டு, அறிவுத்துறையினர் தொழிலாளர் – விவசாயித் தோழர்களைத தாழ்வாக நோக்கலாம். ஒருவரிடமுள்ள விசேசமான தேர்ச்சிகள் அகங்காரத்துக்கும் பிறர் மீது இகழ்ச்சி கொள்வதற்கும் மூலனதமாகலாம். ஒருவருடைய வயது கூட இறுமாப்புக்குத் தளமாக அமையலாம். விவேகமும் திறமையும் இருப்பதனால், இளைஞர்கள் முதியோரை இகழ்ந்து நோக்கலாம், முதியர்கள் தமது பழுத்த அனுபவம் காரணமாக இளைஞர்களைத் தாழ்வாக கருதலாம். இத்தகைய எல்லா விசயங்களும், விமர்சன ரீதியில் நோக்கப்படாவிட்டால், தடைகளாக அல்லது வேண்டாத சுமையாக மாறலாம்.
(படிப்பும் நடப்பு நிலைமையும் – 12 ஏப்ரல் 1944)

கம்யூனிஸ்டுகள் முழுமையின் தேவைகளுக்கு பகுதியின் வேலைகளைக் கீழ்படுத்தும் கோட்பாட்டை கிரகித்துக் கொள்ள வேண்டும். ஒரு பிரேரணை, பகுதி நிலைமைக்கு மாத்திரம் பொருந்தியதாக இருக்கும் அதே வேளையில், முழு நிலைமைக்கும் பொருந்தியதாக இல்லாவிட்டால், பகுதி முழுமைக்கு இடம் விட்டுக் கொடுக்க வேண்டும். வேறு விதமாகச் சொன்னால் ஒரு பிரேரணை பகுதி நிலைமைக்கு பொருத்தமற்றதாகவும் ஆனால் முழு நிலைமைக்கும் பொருந்தியதாகவும் இருந்தால், பகுதி முழுமைக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். நிலைமையை முழுமையாக நோக்குவது என்பதன் அர்த்தம் இதுவே ஆகும்.
(தேசிய யுத்தத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம் – அக்டோபர் 1938)

புரட்சிகரக் கூட்டுறவில் தாராளவாதம் என்பது பெருந்தீங்கு விளைவிக்கும் ஒன்று. இது ஐக்கியத்தை அரித்துத் தின்னுகின்ற, ஒன்றிணைப்பைச் சீர்குலைக்கின்ற, வேலையில் பாராமுகத்தை உண்டாக்குகின்ற, வேற்றுமையை விதைக்கின்ற ஒரு நச்சுத் திரவம். அது புரட்சிகர அணிகளிலுள்ள கட்டுக்கோப்பான நிறுவன அமைப்பையும் கண்டிப்பான கட்டுப்பாட்டையும் அழித்து விடுகின்றது. கொள்கைகள் முழுமையாய் நடைமுறைப்படுத்துவதை அது தடுக்கின்றது. கட்சியின் தலைமையிலுள்ள மக்களிடமிருந்து, கட்சி அமைப்புகளைப் பிரித்து விடுகின்றது. இது மிகத் தீமையான ஒரு போக்காகும்.
(தாராளவாதத்தை எதிர்ப்போம் – 7 செப்டம்பர் 1937)

தாராளவாதிகள் மார்க்சியக் கோட்பாடுகளை வெறும் வறட்டுத் தத்துவமாகக் கருதுகின்றனர். அவர்கள் மார்க்சியத்தை அங்கீகரிக்கின்றனர், ஆனால் அதை நடைமுறைப்படுத்த தயாராக இல்லை. தமது தாராளவாதத்துக்குப் பதிலாக, அதனிடத்தில் மார்க்சியத்தை வைக்கவும் அவர்கள் தயாராக இல்லை. இந்த நபர்களிடம் மார்க்சியம் இருக்கும் அதே வேளையில் தாராளவாதமும் இருக்கின்றது. அவர்கள் மார்க்சியம் பேசுகின்றனர், ஆனால் தாராளவாதத்தை நடைமுறைப் படுத்துகின்றனர். பிறருக்கு மார்க்சியத்தையும் தமக்குத் தாராளவாதத்தையும் பிரயோகிக்கின்றனர். அவர்கள் இரண்டு விதமான சரக்குகளையும் இருப்பில் வைத்து, இரண்டுக்கும் பயன்பாடு காண்கின்றனர். இப்படித்தான் சில நபர்களின் மூளைகள் வேலை செய்கின்றன.
(தாராளவாதத்தை எதிர்ப்போம் – 7 செப்டம்பர் 1937)



No comments:

Post a Comment