Sunday 7 January 2018

28. கம்யூனிஸ்டுகள் - மா சே துங்

ஒரு கம்யூனிஸ்ட் பரந்த உள்ளம் படைத்தவராக இருக்க வேண்டும். அவர் நேர்மையும் ஊக்கமும் உடையவராக இருக்க வேண்டும். புரட்சியின் நலன்களை தனது சொந்த உயிர் போல் கருத வேண்டும். தனது சொந்த நலன்களை புரட்சியின் நலன்களுக்கக் கீழ்ப்படுத்த வேண்டும். எங்கும் எப்பொழுதும் அவர் சரியான கோட்பாடைக் கடைபிடித்து, தவறான கருத்துக்கள், செயல்கள் எல்லாவற்றுக்கும் எதிராகச் சளையாத போராட்டம் நடத்த வேண்டும், இவ்வாறு, கட்சியின் கூட்டு வாழ்வை உறுதிப்படுத்தி, கட்சிக்கும் மக்கள்திரளுக்கும் இடையிலுள்ள தொடர்புகளைப் பலப்படுத்த வேண்டும். அவர் எந்த ஒரு தனிநபரிலும் பார்க்க கட்சியிலும் மக்களிலும் கூடுதலான அக்கறையும், தன்னைவிடப் பிறர் மீது கூடுதலான அக்கறையும் செலுத்த வேண்டும். இப்படிச் செய்தால்தான் அவரை ஒரு கம்யூனிஸ்ட் என்று கருத முடியும்
(தாராளவாத்தை எதிர்ப்போம் – 7 செப்டம்பர் 1937)

ஒரு கம்யூனிஸ்ட்டின் சொற்களையும், செயல்களையும் உறைத்துப் பார்க்கும் அதி உயர்ந்த முறை யாதெனில், அவை ஏகப் பெரும்பான்மையான மக்களின் அதி உயர்ந்த நலன்களுக்கு இசைவாக இருக்கின்றனவா, இல்லையா, அவர்களுடைய ஆதரவைப் பெறுகின்றனவா, இல்லையா என்று பார்ப்பதாகும். இதை நமது தோழர்கள் எல்லோரும் உணரும்படி செய்ய வேண்டும்.
(கூட்டரசாங்கம் பற்றி – 24 ஏப்ரல் 1945)

கம்யூனிஸ்டுகள் மிகத் தொலைநோக்குப் பார்வையுடையவர்களாகவும், மிகுதியும் சுய உணர்வு உடையவர்களாகவும், மிக உறுதியானவர்களாகவும், நிலைமைகளைக் கணிப்பதில் பாரபட்சம் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் பெரும்பான்மை மக்களைச் சார்ந்து, அவர்களுடைய ஆதரவை வென்றெடுக்க வேண்டும்.
(ஜப்பான் – எதிர்ப்பு யுத்த காலத்தில் சீனக் கம்யூனிஸ்டுக்
கட்சியின் கடமைகள் – 3 மே 1937)

கம்யூனிஸ்டுகளாகிய நாம் விதை போன்றவர்கள், மக்கள் மண் போன்றவர்கள், செல்லும் இடமெங்கும், நாம் மக்களுடன் ஐககியப்பட்டு, அவர்கள் மத்தியில் வேர் ஊன்றி, மலர வேண்டும்.
(சுங்கிங் பேச்சுவார்த்தைகள் பற்றி – 17 ஆக்டோபர் 1945)

கம்யூனிஸ்டு ஒருவர், தான் மட்டும் எல்லாவற்றிலும் மேலானவர், பிறர் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்ற அகங்கார எண்ணம் படைத்தவராகவோ அல்லது இறுமாப்பு உடையவராகவோ இருக்கக் கூடாது. அவர் தனது சிறிய அறையில் முடங்கிக் கிடக்கவோ அல்லது ஜம்பம் அடிக்கவோ, பீற்றிக்கொள்ளவோ அல்லது பிறர் மீது ஆதிக்கம் செலுத்தவோ கூடாது.
(ஷென்சி – கான்சு – நிங்ஷியா எல்லைப் பிரதேச பிரதிநிதிகள்
அவைச் சொற்பொழிவு – 21 நவம்பர் 1941)

கம்யூனிஸ்டுகள் எப்பொழுதும கட்சிக்கு வெயிலுள்ள மக்களின் கருத்தோட்டங்களை கவனமாகக் கேட்க, அவர்களுக்குத் தமது கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். அவர்கள் சொல்வது சரியாக இருந்தால், நாம் அதை வரவேற்க வேண்டும். அவர்களுடைய பலமான அம்சங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அது தவறாக இருந்தால், அவர்கள் சொல்வதை முழுவதுமாக்கச் சொல்லவிட்டு, பின்னர் அவ்விசயங்கள் பற்றி அவர்களுக்குப் பொறுமையோடு விளக்க வேண்டும்.
(ஷென்சி – கான்சு – நிங்ஷியா எல்லைப் பிரதேச பிரதிநிதிகள்
அவைச் சொற்பொழிவு – 21 நவம்பர் 1941)


No comments:

Post a Comment