Sunday 7 January 2018

29. ஊழியர்கள் - மா சே துங்

நமது கட்சி அமைப்புகள் நாடு முழுவதிலும் விரிவாக்கப்பட வேண்டும், நாம் பல பத்தாயிரம் ஊழியர்களை உணர்வுபூர்வமாக பயிற்றுவிக்க வேண்டும். நூற்றுக்கணக்கான தலை சிறந்த மக்களின் தலைவர்களைப் பெற்றிருக்க வேண்டும். அந்த ஊழியர்களும் தலைவர்களும்,  மார்க்சிய – லெனினியத்தில் தேர்ச்சியும், அரசியல் ரீதியில் தொலைநோக்குப பார்வையும், வேலையில் திறமையும், முற்றான சுய-தியாக உணர்வும், பிரச்சினைகளைச் சுதந்திரமாகத் தீக்கும் ஆற்றலும், கஷ்டங்கள் மத்தியில் நிதானமும், தேசம், வர்க்கம், கட்சி இவற்றுக்குத் தொண்டு செய்வதில் விசுவாசமும் அர்ப்பண சிந்தையும் உடையவர்களாக இருக்க வேண்டும.

உறுப்பினர்களுடனும் மக்களுடனும் கொள்ளும் அதன் தொடர்புகளுக்கு கட்சி அவர்களைத் தான் சார்ந்திருக்கின்றது. மக்கள்திரளுக்கு அவர்கள் அளிக்கும் உறுதியான தலைமையைச் சார்வதன் மூலம், எதிரியைத் தோற்கடிப்பதில் கட்சி வெற்றி பெற முடியும். இத்தகைய ஊழியர்களும் தலைவர்களும் சுயநலம், தனிநபர் வீரவாதம், வெளிப்பகட்டு, சோம்பல், செயலற்றநிலை, செருக்குடைய குறுங்குழுவாதம் ஆகியவற்றில் இருந்து விடுதலை பெற்ற, சுயநலமற்ற தேதிய வீரர்களாகவும், வர்க்க வீரர்களாகவும் திகழ வேண்டும். நமது கட்சியின் உறுப்பினர்கள், ஊழியர்கள், தலைவர்களுக்குத் தேவையான பண்புகளும் வேலை நடையும் இத்தகையவையே.
(ஜப்பானிய – எதிர்ப்பு தேசிய ஐக்கிய முன்னணிக்கு மக்கள்
கோடிக் கணக்கில் வென்றெடுப்போம் – 7 மே 1937)

ஊழியர்களை நன்கு பயன்படுத்துவது எப்படி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இறுதியாக ஆராய்ந்து பார்த்தால், தலைமைக்கு கருத்துக்களை முன்வைப்பது, ஊழியர்களை பயன்படுத்துவது என்ற இரண்டு பொறுப்புகள் உண்டு. திட்டங்கள் வகுப்பது, தீர்மானங்கள் எடுப்பது, கட்டளைகள், உத்தரவுகள் பிறப்பிப்பது போன்றவை “கருத்துகளை முன்வைக்கும்” வகையைச் சேர்ந்தவை. கருத்துகளை செயல்படுத்த வேண்டுமானால், நாம் ஊழியர்களை ஐக்கியப்படுத்தி, செயலில் இறங்கும்படி அவர்களுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும். இது “ஊழியர்களை நன்கு பயன்படுத்துவ”தைச் சேர்ந்ததாகும்.
(தேசிய யுத்தத்தல் சீனக் கம்யூனீஸ்ட் கட்சியின் பாத்திரம் – அக்டோபர் 1938)

ஊழியர்கள் நல்வழியில் ஈடுபடுத்துவது எப்படி என்பதை நாம் அறிய வேண்டும். அவ்வாறு செய்வதற்கு பலவழிகள் உள்ளன

முதலாவதாக, அவர்களுக்கு வழிகாட்டுவது. இதன் பொருள், அவர்கள் பொறுப்புகளை ஏற்கும் துணிவு பெறுவதற்காக, அவர்களுடைய வேலையில் அவர்களைச் சுதந்திரமாய் விடுவதாகும். அதே வேளையில் கட்சியின் அரசியல் திசைவழியின் வழி காட்டுதலில் தமது முன் முயற்சியை முற்றாக வெளிப்படுத்துவதற்காக, அவர்களுக்கு காலா காலத்தில் அறிவுரை கூறவேண்டும்.

இரண்டாவதாக, அவர்களுடைய தரத்தை உயர்த்துவது. இதன் பொருள், அவர்கள் தமது தத்துவ விளக்கத்தையும், வேலை ஆற்றலையும் விரிவு படுத்துவதற்காக, அவர்களுக்குப் படிக்கும் வாய்ப்பை அளித்து, அவர்களைக் கற்பிப்பதாகும்.

மூன்றாவதாக, அவர்களுடைய வேலையை சரிபார்த்து, தமது அனுபவத்தைத் தொகுக்கவும் தமது சாதனைகளைப் பெருக்கவும், பிழைகளைத் திருத்தவும் அவர்களுக்கு உதவி செய்வது. சரிபார்க்காமல் அவர்களுக்கு வேலை வழங்குவது. பாரதூரமான தவறுகள் ஏற்பட்ட பின்னர் மாத்திரம் கவனம் செலுத்துவது – இது ஊழியர்கள் மீது அக்கறை செலுத்தும் முறையல்ல.

நான்காவதாக, தவறுகள் இழைத்த ஊழியர்களைப் பொறுத்தவரையில், பொதுவாக அறிவுறுத்தி இணங்கச் செய்யும் முறையை பயன்படுத்தி, தமது பிழைகளைத் திருத்த அவர்களுக்கு உதவி அளிக்க வேண்டும். பாரதூரமான தவறுகள் இழைத்த பின்பும், வழிகாட்டலை ஏற்க மறுக்கும் ஊழியர்களுக்கு மட்டும் போராட்ட முறையை உபயோகிக்க வேண்டும். இங்கு பொறுமை அவசியமானது. ஆட்களுக்கு “சந்தர்ப்பவாதிகள்” என்று சுலபமாக முத்திரை குத்துவதும், அவர்களை எதிர்த்து இலேசமாகப் “போராட்டங்கள் தொடுக்க” தொடங்குவதும் தவறு ஆகும்.

ஐந்தாவதாக, அவர்களுடைய கஷ்டங்களில் கவனம் செலுத்துவது. நோய், வாழ்வு, குடும்பம் முதலியவற்றின் தொல்லைகள் காரணமாக ஊழியர்கள் கஷ்டப்படும் போது, நாம் நிச்சயம் அவர்கள் மீது சாத்தியமான அளவு கவனம் செலுத்த வேண்டும். ஊழியர்களை நன்றாகக் கவனிப்பது என்பது இதுவேயாகும்.
(தேசிய யுத்தத்தல் சீனக் கம்யூனீஸ்ட் கட்சியின் பாத்திரம் – அக்டோபர் 1938)

கட்சி ஊழியர்கள் மீது மாத்திரம் அல்ல, கட்சியில் இல்லாத ஊழியர்கள் மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் புறக்கணிக்க முடியாத திறமைசாலிகள் பலர் கட்சிக்கு வெளியில் இருக்கின்றனர். தனிமை, செருக்கு – இவற்றில் இருந்து தன்னை விடுவித்து. கட்சியில் இல்லாத ஊழியர்களுடன் நன்றாக வேலை செய்து அவர்களுக்கு விசுவாசமான உதவியளித்து, அவர்கள் மீது ஒர் ஆர்வம் நிறைந்த, தோழமைக் கண்ணோட்டத்தை மேற்கொண்டு, ஜப்பானை எதிர்த்து, தேசத்தைப் புனரமைக்கும் மாபெரும் இலட்சியத்தில் அவர்களை முன்முயற்சி எடுக்கச் செய்வது ஒவ்வொரு கம்யூனிஸ்டின் கடமையாகும்.
(தேசிய யுத்தத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம் – அக்டோபர் 1938)


No comments:

Post a Comment