Monday 8 January 2018

30. இளைஞர்கள் - மா சே துங்

நமது நாடு இன்னும் மிக வறிய ஒரு நாடாக இருக்கின்றது. ஒரு குறுகிய காலத்தில் இந்த நிலைமையை எம்மால் அடிப்படையில் மாற்ற முடியாது. நமது இளைய தலைமுறையினரும், நமது மக்கள் அனைவரும் தமது சொந்தக் கைகளால் வேலை செய்து கூட்டு முயற்சிகள் எடுப்பதன் மூலம் தான், சீனாவை சில பத்தாண்டுகளில் ஒரு பலம் வாய்ந்த, வளம் கொழிக்கும் நாடாக ஆக்க முடியும் என்பதை நமது இளைஞர்கள் அனைவரும் புரிந்து கொள்ள நாம் உதவி செய்ய வேண்டும். நமது சோஷலிச அமைப்பின் உருவாக்கம் எதிர் காலத்தின் இலட்சிய சமுதாயத்துக்குச் செல்லும் பாதையைத் திறந்ததிருக்கின்றது. ஆனால் இந்தக் கனவை நனவாக மாற்ற கடின உழைப்பு அவசியம்.
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக்
கையாள்வது பற்றி – 27 பிப்பரவரி 1957)

அறிவுத்துறையினர் மக்கள்திரள் புரட்சிப் போராட்டங்களில் உள்ளமும் உயிருமாக ஈடுபடாத வரையில் மக்களின் நலன்களுக்காகத் தொண்டு செய்யத் தீர்மானித்து, மக்களோடு இரண்டறக் கலக்காத வரையில், அவர்கள் அடிக்கடி அகநிலைப் போக்கு, தனிநபர்வாத இயல்பு, சிந்தனையில் நடைமுறை சாத்தியப்பாடின்மை உடையவர்களாகவும் செயலில் உறுதிப்பாடு இல்லாதவர்களாகவும் இருப்பதுண்டு. ஆகவே, சீனாவில் பரந்துபட்ட புரட்சிகர அறிவுத்துறையினர் ஒரு முன்னணிப் படையின் பாத்திரத்தை வகித்த அல்லது மக்களுடன் ஓர் இணைப்புப் பாலமாகச் சேவை செய்த போதிலும், இறுதிவரை எல்லாரும் புரட்சியாளராக இருப்பர் எனச் சொல்ல முடியாது. நெருக்கடியான தருணங்களில் சிலர் புரட்சி அணிகளை விட்டு விலகிச் செயலற்ற நிலையில் ஆழ்ந்துவிடுவர். அதே வேளையில் ஒரு சிலர் புரட்சியின் எதிரிகளாகக்கூட மாறி விடுவர். ஒரு நீண்டிகால மக்கள் திரள் போராடடங்களில் தான் அறிவுத்துறையினர் தமது இந்தக் குறைபாடுகளை வெற்றி கொள்ள முடியும்.

(சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் – டிசம்பர் 1939)

No comments:

Post a Comment